இந்திய வரலாறு
கொல்லங்கொண்டான்
கொல்லங் கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் 'கொல்லங் கொண்ட பாண்டியன்' என அழைக்கப்பட்டான் என திநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு குறிப்பிடும். மேலும் இம்மன்னன் மலை நாடு, சோழ நாடு, இரு கொங்கு நாடுகள், ஈழ நாடு, தொண்டை நாடு போன்றனவற்றினையும் வென்றான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழ நாடு, நடு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் இவனைப் பற்றிய கல்வெட்டுக்களைக் காணலாம். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனைப் போல இம்மன்னனும் "எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீகுலசேகர பாண்டியன்" என சிறப்பிக்கப்பட்டான். தனது ஆட்சியில் நாடெங்கு அமைதி நிலவ வேண்டும் என்ற காரணம் கருதி தனது தம்பிமார்களை அரசப் பிரதிநிதிகளாக்கினான். போரில் வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து கைப்பற்றிய பொருள்களைக் கொண்டு நெல்லைக் கோயில் திருச்சுற்று மாளிகையினை கட்டுவித்தான். நெல்லையப்பரிடம் பேரன்பு கொண்ட கொல்லங் கொண்டான். ஆட்சிக் காலத்தில் நான்கு அரசப் பிரதிநிதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரகுணராம பாண்டியன்
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613 முதல் 1618 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். வரகுண குலசேகரப் பாண்டியன் என்ற சிறப்புப் பெயரினையும் வேத விதிப்படி வேள்விகளைச் செய்த காரணத்தினால் குலசேகர சோமாசிரியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். 1748 ஆம் ஆண்டளவில் ஆட்சி செய்த பாண்டிய மன்னனொருவனும் தனது பெயரை வரகுணராம பாண்டிய குலசேகர தேவ தீட்சிதர் என தன்னை வரகுணராம பாண்டியன் பெயரினையும் தனது சிறப்புப் பெயரினையும் இணைத்து வைத்துக் கொண்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டியர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசின் மேலாண்மையில் இருந்தனர். மேலும் அவர்களுக்குத் திறை செலுத்துபவர்களாகவும் இருந்தனர்.
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த இவனிற்கு இராமகிருஷ்ணர் என்ற வடமொழி அந்தணர் உதவிகள் பல செய்தார். கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன்.
வரதுங்கப் பாண்டியன்
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன், வீரபாண்டியன் போன்ற சிறப்புப் பெயர்களையும் பெற்றிருந்தான். சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் 'வில்லவனை வென்றான், வல்லம் எறிந்தான்" எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் போல் தமிழில் புலமை பெற்றிருந்தான். பிரமோத்தர காண்டம், கருவை கலித்துறை அந்தாதி, கருவை பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி ஆகிய நூல்களினைப் பாடிய பெருமையினை உடையவனான இவன் சிவனிடம் பக்தி உடையவனாகத் திகழ்ந்தான்.

0 comments:
Post a Comment